
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பொலார்ட் அறிவித்துள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
33 வயதான பொலார்ட் 2007-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அவர் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை இந்தியாவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கொல்கத்தாவில் விளையாடினார். அவரது பல சாதனைகளில், பொலார்ட் 2021-ல் இலங்கைக்கு எதிரான டி20 வெற்றியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
123 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2706 ரன்களை 26 ரன்கள் எடுத்துள்ளார் பொலார்ட். இதில் 3 சதங்கள் 13 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 119. ஸ்ட்ரைக் ரேட் 94. பந்து வீச்சில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 101 சர்வதேச டி20 போட்டிகளில் 1569 ரன்களை எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 135.14. பந்து வீச்சில் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் . பொலார்ட் மிகப்பெரிய பீல்டர், இவரது பீல்டிங்கிலேயே பல போட்டிகளை மே.இ.தீவுகள் வென்றுள்ளது.
இந்நிலையில், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பொலார்ட் அறிவித்துள்ளார். "மேற்கிந்திய தீவுகள் அணியை முன்னோக்கி கொண்டு செல்லும் இளம் வீரர்களுக்கு நான் வழி விடுகிறேன். நான் எப்போதும் என்னால் இயன்ற விதத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஆதரவளிப்பேன். எனது கனவை நனவாக்கியதற்கு ஆழ்ந்த நன்றியுடன், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் எனது மட்டையை உயர்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.