உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி; பிசிசிஐ அழைப்பு விடுவிக்கவில்லை: கபில்தேவ் வருத்தம்!

1983 உலகக்கோப்பையுடன் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கபில்தேவ்
1983 உலகக்கோப்பையுடன் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கபில்தேவ்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காண தனக்கு பிசிசிஐ அழைப்பு விடுக்கவில்லை என்பதால், நேரில் செல்லவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத இந்திய அணியும், முதலிரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியைச் சந்தித்த பின்னர் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சம பலத்துடன் களத்தில் உள்ளன.

கபில்தேவ்
கபில்தேவ்

வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போட்டியைக் காண வருமாறு பல்வேறு பிரபலங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸ் ஆகியோர் வருகை தர உள்ளனர். இதே போல், சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ஷாருக்கான், வெங்கடேஷ், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோரும் போட்டியைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

உலகக்கோப்பைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், மகேந்திர சிங் தோனி
உலகக்கோப்பைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், மகேந்திர சிங் தோனி

இந்நிலையில், இந்த போட்டியைக் காண முன்னாள் கேப்டன்கள் மற்றும் உலக கோப்பை வென்ற அணிகளின் கேப்டன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இதனால் 1983-ல் கோப்பை வென்ற கபில் தேவ், 2011-ல் கோப்பை வென்ற மகேந்திர சிங் தோனி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கபில் தேவ் இந்த போட்டியைக் காண நேரில் வராத நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், உலகக்கோப்பைப் போட்டியை காண செல்லாதது குறித்து கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த கபில் தேவ், “என்னை இந்நிகழ்ச்சிக்கு அழைத்தீர்கள் வந்துள்ளேன். இறுதிப் போட்டியைக் காண என்னை அவர்கள் (பிசிசிஐ) அழைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை 1983-ம் ஆண்டு கோப்பை வென்ற மொத்த அணி வீரர்களையும் இறுதிப் போட்டியைக் காண மைதானத்திற்கு அழைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானும், இறுதி போட்டியைக் காண தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in