அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை ஜூலன்: கிரிக்கெட்டுக்கு ‘குட்பை!’

இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிக்கெட்டில் அறிமுகமானவர் அதே அணிக்கு எதிரான போட்டியுடன் விடைபெறுகிறார்
அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை ஜூலன்: கிரிக்கெட்டுக்கு ‘குட்பை!’

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், சிறந்த பந்துவீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிதான் அவர் கடைசியாக விளையாடும் கிரிக்கெட் போட்டி ஆகும்!

மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தின் சக்தா எனும் ஊரைச் சேர்ந்த ஜூலன் கோஸ்வாமி, ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவரது கவனம் கிரிக்கெட் பக்கம் திரும்பியது. பையன்களுடன் இணைந்து டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். கடும் உழைப்பு மற்றும் பயிற்சியின் பலனாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். 2002-ல் சென்னையில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாகக் களமிறங்கினார். அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடினார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் போட்டிகள், டி-20 போட்டிகள் என கிரிக்கெட்டின் அனைத்து வடிவப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்களித்தவர் ஜூலன் கோஸ்வாமி. மொத்தம் 352 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவர். முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜுடன் இணைந்து சிறப்பாக விளையாடி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கிறார். வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரான ஜூலன், சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தார். 'சக்தா எக்ஸ்பிரஸ்’ எனும் செல்லப்பெயரும் அவருக்கு உண்டு.

ஜூலன் கோஸ்வாமி
ஜூலன் கோஸ்வாமி

இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில், இந்திய அணியில் ஜூலன் கோஸ்வாமி இடம்பெற்றிருக்கிறார். லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 24-ல், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியுடன் அவர் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார். அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தொடங்கிய அவரது கிரிக்கெட் பயணம் அதே அணிக்கு எதிரான போட்டியுடன் நிறைவுபெறுகிறது. 2022 உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பின்னர் ஓய்வில் இருந்த அவர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து தொடருடன் கிரிக்கெட்டுக்கு அவர் ஒட்டுமொத்தமாக குட்பை சொல்லவிருக்கிறார்.

பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் ஜூலன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்குப் பெரும் இழப்பு எனக் கருதப்படுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பல வெற்றிகளைத் தேடித்தந்த மித்தாலி ராஜ், கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in