நான்காவது முறையாக ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் ஜாக்கிசான்!

சுடரேந்திய சீன ராணுவ வீரரால் இந்தியா அதிருப்தி
நான்காவது முறையாக ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் ஜாக்கிசான்!
ஒலிம்பிக் சுடரோட்டத்தில் ஜாக்கிசான்

பெய்ஜிங்கில் தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை முன்னிட்டு, ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வோர் வரிசையில் பிரபல நடிகர் ஜாக்கிசான் பங்கேற்றார்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உலகளாவிய ஒலிம்பிக் சுடரோட்டம், சீனாவுக்குள் குறிப்பிட்ட தொலைவுக்குள் நடைபெற முடிவானது. அதன்படி, பல்வேறு விளையாட்டு மற்றும் இதர துறைகளின் பிரபலங்கள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடினார்கள். அந்த வரிசையில் ஹாங்காங்கைச் சேர்ந்த, தனது ஆக்‌ஷன் திரைப்படங்களால் உலகம் முழுக்க ரசிகர்களை ஈர்த்திருக்கும், ஜாக்கிசான் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றார்.

சீனப்பெருஞ்சுவரில் நடைபெற்ற ஜாக்கிசானின் ஒலிம்பிக் சுடரோட்டத்தை முன்னிட்டு, அவரது சர்வதேச பிரபலம் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு ஊடகப் பார்வை அதிகரித்து இருந்தது. 67 வயதாகும் ஜாக்கிசான், “அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய சுடரோட்டத்தில் உடலை நடுங்கச் செய்யும் மைனஸ் குளிரில் ஓடியதற்காக பெருமையடைவதாக” அதன் பின்னரான பேட்டியில் தெரிவித்தார். தொடர்ந்து, 4-வது முறையாக ஒலிம்பிக் சுடரேந்தும் பெருமை ஜாக்கிசானுக்கு வாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கி ஃபேபவோ
கி ஃபேபவோ

முன்னதாக, இந்த ஒலிம்பிக் சுடரோட்டத்தில் பங்கேற்ற கி ஃபேபவோ என்ற சீன ராணுவத்தின் கமாண்டரால் சர்ச்சை எழுந்தது. இந்தியாவின் லடாக் எல்லையில், 2 ஆண்டுகளுக்கு முன்னார் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் பங்கெடுத்து, தலையில் படுகாயமடைந்தவர் இந்த கி ஃபேபவோ. இவரது ’தீரத்தை’ பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகள் கொடுத்து கவுரவித்திருக்கும் சீன அரசு, அந்த வரிசையில் தற்போது ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பெருமையையும் வாரித்தந்தது.

இருநாட்டு எல்லையில் நடைபெற்ற முறையற்ற தாக்குதலில் பங்கேற்று, பல இந்திய வீரர்கள் உயிரிழக்க காரணமான ஒரு ராணுவ வீரருக்கு, சர்வதேச இணக்கத்தின் அடையாளமான ஒலிம்பிக் விளையாட்டின் சுடரை ஏந்த அனுமதித்தது குறித்து, பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தியா தனது அதிகாரபூர்வ அதிருப்தியை பதிவுசெய்யும் வகையில், ’பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை இந்திய தூதர் புறக்கணிப்பார்’ என தெரிவித்துள்ளது. மேலும் ஒலிம்பிக்கை அரசியலாக்க சீனா முடிவு செய்தது குறித்து, தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நேரலையாக தரவிருக்கும் தூர்தர்ஷனின் ஸ்போர்ட்ஸ் சானல், ஒலிம்பிக் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை ஒளிபரப்பப்போவதில்லை என பிரச்சார் பாரதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.