‘தோனிதான் காரணம்’ - டி20யில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த ருதுராஜ் கெய்க்வாட் பெருமிதம்!

‘தோனிதான் காரணம்’ - டி20யில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த ருதுராஜ் கெய்க்வாட் பெருமிதம்!
Updated on
2 min read

ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலை விஞ்சினார்.

இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். நேற்று அவர் 20 ரன்கள் சேர்த்த போது ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் 4000 ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் சிறப்பாக விளையாடுவது பற்றி பேசியுள்ள ருதுராஜ் "சிஎஸ்கே அணி மற்றும் தோனியிடம் கற்றதைதான் இப்போது செயல்படுத்துகிறேன். தோனியிடம்தான் ஒரு போட்டியை எப்படி அணுகவேண்டும் என கற்றுக் கொண்டேன்" எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20யில் சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், நேற்று 4வது டி20 போட்டியிலும் தனது பேட்டிங்கால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இக்கட்டான சூழ்நிலையில் தொடக்க வீரர் ருதுராஜ் பொறுப்புடன் 28 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது கேஎல் ராகுலின் பெரிய சாதனையை ருதுராஜ் தகர்த்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவை சேர்ந்த இந்த இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் விராட் கோலியை முந்தியுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் டி-20 கிரிக்கெட்டில் மிக வேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியாவின் டாப் பேட்ஸ்மேன் ஆனார். அதேசமயம் கே.எல்.ராகுலை பின்னுக்கு தள்ளியுள்ளார். ருதுராஜ் 116வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார், ராகுல் 117வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார். விராட் கோலி 138 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 ஆயிரம் ரன்கள் எடுத்தார். அதேபோல டி-20 போட்டிகளில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ருதுராஜுக்கு மேல் 116 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்த டெவோன் கான்வேயின் பெயர் உள்ளது. அதன்பின் 115வது இன்னிங்சில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் பாபர் அசாம் . இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயிலின் பெயர் முதலிடத்தில் உள்ளது, அவர் 107 இன்னிங்ஸ் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். கெய்லுக்கு பின் ஷான் மார்ஷ் 113 இன்னிங்ஸ்களில் 2வது இடத்தில் உள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் வேகமாக 4,000 ரன்களை கடந்தவர்கள் (இன்னிங்ஸ் வாரியாக) :

107 - கிறிஸ் கெய்ல்

113 - ஷான் மார்ஷ்

115 - பாபர் அசாம்

116 – டெவோன் கான்வே

116 - ருதுராஜ் கெய்க்வாட்

117 - கே.எல்.ராகுல்

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் (இன்னிங்ஸ் வாரியாக) :

116 – ருதுராஜ் கெய்க்வாட்

117 – கே.எல் ராகுல்

138 – விராட் கோலி

143- சுரேஷ் ரெய்னா

147 – ரிஷப் பண்ட்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in