எங்கள் வெற்றியைப் பறித்தது மழையும், கே.எல்.ராகுலும்தான்: வங்கதேச ரசிகர்கள் புலம்பல்!

எங்கள் வெற்றியைப் பறித்தது மழையும், கே.எல்.ராகுலும்தான்: வங்கதேச ரசிகர்கள் புலம்பல்!

வங்கதேச அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது மழையும், இந்திய வீரர் கே.எல்.ராகுலும்தான் என அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று அடிலெய்டு மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 184 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட் செய்த வங்கதேச அணியின் வீரர் லிட்டான் தாஸின் அதிரடியால் இந்தியாவின் நம்பிக்கை பொய்த்தது. ஆனாலும் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பின்னர் டிஎல்எஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின்னர் விக்கெட்டுகள் சரிந்த காரணத்தால், வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது.

வங்கதேச அணியின் வெற்றியை பறித்தது கே.எல்.ராகுல்தான் என அந்நாட்டு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஏனென்றால் நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் கே.எல்.ராகுல் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரின் ஆரம்பகட்ட அதிரடிதான் இந்திய அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தது. அதேபோல வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லிட்டான் தாஸ், இந்திய பந்துவீச்சை நாலாபுறபுறமும் சிதறடித்தார். இந்தியா எத்தனை வியூகம் வகுத்தபோதும், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி தாஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். இந்த நிலையில்தான் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வங்கதேசம் 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நின்றது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மழைக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கிய உடனே லிட்டான் தாஸை ரன் அவுட் செய்தார் கே.எல்.ராகுல். இதுதான் நேற்றைய ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கே.எல்.ராகுல் அந்த ரன் அவுட்டை எடுக்கவில்லை என்றால் வெற்றி வங்கதேசத்தின் வசமாகியிருக்கும். இதுதான் அந்நாட்டு ரசிகர்களின் புலம்பலுக்கு காரணமாக உள்ளது.

அதுபோல மழையையும் நொந்துக் கொள்கின்றனர் வங்கதேச ரசிகர்கள். மழையே வராமல் இருந்திருந்தால் லிட்டான் தாஸின் அதிரடி தொடர்ந்திருக்கும், அணி வெற்றிருக்கும் அல்லது மழையால் 7 ஓவருடன் ஆட்டம் முழுமையாக நின்றிருந்தாலும் ரன்கள் முன்னிலைப்படி வங்கதேசம் வென்றிருக்கும். இதனால் மழையும், ராகுலும்தான் எங்கள் அணி தோற்க காரணம் என்று வங்கதேச அணி ரசிகர்கள் புலம்புகின்றனர். அதே சமயத்தில் கடைசி வரை டஃப் கொடுத்த வங்கதேச அணிக்கு இந்திய ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in