ஓய்வை அறிவிக்கிறாரா தோனி?... மைதானத்திலேயே ரசிகர்களை காத்திருக்க சொன்ன சென்னை அணி நிர்வாகம்!

தோனி
தோனி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டிக்குப் பிறகு, ரசிகர்கள் மைதானத்திலேயே காத்திருக்க வேண்டும் என சென்னை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சென்னை அணியின் இன்றைய போட்டிதான் சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டி ஆகும். சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப்பெற்று இரண்டாவது தகுதிச்சுற்று வரை முன்னேறினால் சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் ஆடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப்பெறாமலோ அல்லது எலிமினேட்டரில் வெளியேறினாலோ, சேப்பாக்கத்தில் சென்னை அணி இன்று ஆடும் போட்டிதான் கடைசி போட்டியாக இருக்கும்.

தோனி
தோனி

எனவே இன்றைய போட்டியின் முடிவில் தோனி தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் ஏற்கனவே தனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும் என தோனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், 'இந்த போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் உடனே கிளம்பி விட வேண்டாம் எனவும், அவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி காத்திருக்கிறது. எல்லோருக்கும் நன்றி' என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எல்லா அணிகளுமே தங்களின் சொத்த மைதானத்தில் கடைசி லீக் போட்டியில் ஆடி முடித்த பிறகு பதாகைகளோடு மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். அதுபோல இன்றும் சேப்பாக்கத்தில் போட்டி முடிந்த பிறகு வீரர்களுடன் தோனி அணிவகுத்து மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பாரா அல்லது ஓய்வு குறித்து ஏதேனும் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சூழலில் சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த பதிவு, தோனி ரசிகர்களிடம் இருந்து விடைபெறுவதற்கான அறிவிப்பா என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in