ஜடேஜா முடிவால் திடீர் திருப்பம்... மீண்டும் தோனி: சிஎஸ்கேவில் நடப்பது என்ன?

ஜடேஜா முடிவால் திடீர் திருப்பம்... மீண்டும் தோனி: சிஎஸ்கேவில் நடப்பது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா திடீரென முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

ஐ.பி.எல். சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில் 9 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. 2010, 2011, 2018, 2021 என்று நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது கேப்டன் தோனி தலைமையிலான சிஎஸ்கே. 5 முறை 2-வது இடத்தை பிடித்திருந்தது. இவ்வாறு சென்னை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக விளங்கிய கேப்டன் தோனி இந்த சீசனில் திடீரென கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்தார். போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது, கேப்டன் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து வரும் சீசனில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் 9-ம் இடத்திற்கு சென்றுவிட்டது. போட்டியில் இருந்து வெளியேறும் நிலைக்கு சிஎஸ்கே சென்றுவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைக்க உள்ளார் ஜடேஜா. கேப்டன் பதவியை ஏற்க தோனியும் சம்மதித்துள்ளார். இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியை மீண்டும் எம்.எஸ்.தோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா. அவர் தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவும், சி.எஸ்.கே. அணியை வழிநடத்தவும் தோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் அணியை வழிநடத்த தோனி ஒப்புக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.