அறிமுகப் போட்டியிலேயே குஜராத் அணி சாம்பியன்: கோட்டைவிட்டது ராஜஸ்தான் அணி

அறிமுகப் போட்டியிலேயே குஜராத் அணி சாம்பியன்: கோட்டைவிட்டது ராஜஸ்தான் அணி

கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் அசத்தியதோடு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ரன்கள் குவித்ததால் முதன்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது குஜராத் அணி.

இரண்டு மாதங்களாக களைகட்டிய 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமேக்ஸ் இன்று. ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் ஓப்பனர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பட்லர் உடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பவுண்டரி மூலம் ரன் கணக்கை தொடங்கிய சாம்சன் குஜராத் கேப்டன் ஹர்திக் வீசிய பந்தில் சாய் கிசோரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 157.3 கி.மீ வேகத்தில் பட்லருக்கு வீசினார் பெர்குசன். இந்த ஐபிஎல் சீசனில் மிக அதிவேகமாக வீசப்பட்ட பந்து இதுவாகும்.

ஒரு பக்கம் பட்லர் சிறிது அதிரடி காட்ட தொடங்க மறுபக்கம் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது. அடுத்து வந்த படிக்கல் நிதானமாக ஆட, பட்லர் ஷமீ வீசிய ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு திரும்ப முயன்றார். அதே வேளையில் 25 ரன்களை கடந்தபோது ஒரே சீசனில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்தார். ஆனால் மறுமுனையில் படிக்கல் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷித்திடம் சிக்கி வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சாய் கிஷோரும் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ராஜஸ்தானின் பேட்டிங் ஆர்டர் நிலைகுலைந்து போய்விட்டது.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். 131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சாஹா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் போல்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வேட் 8 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - கேப்டன் பாண்டியா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சஹால் இந்த ஜோடியை பிரித்து பாண்டியாவை 34 ரன்களில் வெளியேற்றினார். இருப்பினும் ஒருமுனையில் கில் நிதானமாக விளையாடி வர மில்லர் அவருடன் சிறப்பாக செயலபட்டார். இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

அஸ்வின் வீசிய 12வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி வான வேடிக்கை காட்டினார் ஹர்திக் பாண்டியா. ஆனால் சஹால் பந்துவீச்சில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்திக் அவுட்டாக அடுத்து வந்த மில்லர் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நெருக்கடியான தருணத்தில் 34 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார் ஹர்திக் பாண்டியா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in