சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி

இந்தியாவில் இதுவே முதன் முறை
சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி

FIDE பன்னாட்டு சதுரங்கப் கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன் முறையாக சென்னையில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "FIDE செஸ் ஒலிம்பியாட் 2022 சர்வதேச சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. நடந்து கொண்டிருக்கும் போர் சூழ்நிலை காரணமாக FIDE செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதாக FIDE அறிவித்த பிறகு பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால், தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது. FIDEஇன் அறிவிப்பிலிருந்து சரியாக 10 நாட்களுக்குள், ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, முதல்வர் அலுவலகத்தை அணுகிய சில மணி நேரத்தில் அனைத்து ஒப்புதல்களையும் தமிழக அரசு உடனே வழங்கியது.

1927 முதல் FIDE ஏற்பாடு செய்த முந்தைய 43 செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகளில் இந்தியா ஒருமுறைகூட நடத்த வாய்ப்பு அமையவில்லை. 44-வது FIDE செக்ஸ் ஒலிம்பியாட் 2022க்கான ஏலத்தை வென்றதில் தமிழ்நாடு அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இப்போட்டிகளில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இப்போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பதால் பல அணிகள் இந்தியாவின் சார்பில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும்.

தமிழக அரசு எப்போதும் செஸ் விளையாட்டிற்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. பள்ளிகளில் சதுரங்கத்தை ஊக்குவித்தல், சதுரங்கப் போட்டிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் எனப் பல்வேறு வழிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. FIDE ஆன்லைன் ஒலிம்பியாட் 2020, FIDE World Teams 2019, FIDE Online Olympias 2021-ல் தங்கம், வெண்கலம் வென்ற மாநிலத்தின் 14 வீரர்களுக்கு கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ரொக்கப்பரிசு ரூபாய் 1 கோடியே 98 லட்சம் வழங்கி சிறப்பித்தது. இதுபோன்ற ஊக்குவிப்புகள் காரணமாக இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத் மற்றும் உலகப் புகழ் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளனர். இன்னும் எதிர்காலத்தில் அதிகமான கிராண்ட் மாஸ்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FIDE செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் உத்தேசமாக 26 ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 8, 2022 வரை சென்னையில் நடைபெற்றும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.