இங்கிலாந்தை வாரி சுருட்டியது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி: தொடரையும் கைப்பற்றியது!

இங்கிலாந்தை வாரி சுருட்டியது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி: தொடரையும் கைப்பற்றியது!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

பிரிட்டனின் கேன்டர்பரியில் உள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய பெண்கள் அணியில் ஷபாலி வர்மா 8 ரன்களுடனும், யாஸ்திகா பாட்டியா 26 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்கள். கவுருக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்த ஹர்லின் தியோல் 58 ரன்களில் ஆட்டமிழந்தார், ஆனால் மறுபுறம் அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர் 111 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது.

334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாமி பியூமண்ட்டை ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன்களின் ரன் அவுட் ஆக்கினார். அதனைத் தொடர்ந்து சோபியா டன்க்லி 1 ரன்னில் பெவிலியனுக்கு திரும்பினார். பிறகு எம்மா லாம்ப்பும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆலிஸ் கேப்சி பொறுப்புடன் விளையாடி 39 ரன்கள் எடுத்தார். டேனி வியாட் அதிரடியாக ஆடி 65 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தப் பின்னர் கேப்டன் எமி ஜோன்ஸ் ஓரளவு நிலைத்து ஆடி 39 ரன்களை எடுத்தனர். ஆனாலும் மறுபுறம் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தது. கடைசியாக சார்லி டீன் மட்டும் 37 ரன்கள் எடுத்தார். 44.2 ஓவர்களில் 245 ரன்களை மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவின் சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கபட்டார்.

ஏற்கெனவே ஹோவில் உள்ள கவுண்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது. நேற்றைய வெற்றி மூலம் 2-0 என்ற கணக்கில் 1999 க்குப் பிறகு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய பெண்கள் அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in