
2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அணிகள் 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளதால், லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.
அதேநேரம், வங்கதேசம் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறுகிறது. அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இனி வரும் போட்டிகளில் அந்த வெற்றி பெற்றாலும் அது ஆறுதல் வெற்றியாகவே அமையும்.
இந்தியாவை தொடர்ந்து அரையிதிக்கு தகுப்பெறப்போகும் அணிகள் எவை என்பதை பார்ப்போம்.
தென்னாப்பிரிக்கா
இந்த உலகக் கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்து 2ம் இடத்தில் உள்ள அணி தென்னாப்பிரிக்கா. அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அந்த அணியின் நெட் ரன் ரேட் இந்தியாவை விட கூடுதல். இதனால், தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதி. அந்த அணி அடுத்து இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது. இதில் ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்றாலும் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறும்.
ஆஸ்திரேலியா
5 முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. ஆனால், இம்முறை முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், பின்னர் சுதாரித்த அந்த அணி தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை நழுவவிடும்.
நியூசிலாந்து
இந்த ஆண்டு முதல் போட்டியிலேயே அசத்தலாக ஆடி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை மிரட்டியது நியூசிலாந்து அணி. அதேவேகத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னனியில் இருந்தது. ஆனால், இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு அந்த அணி அடுத்தடுத்து 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதனால், 8 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்து, நாளை பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுடனான போட்டியில் கட்டாய வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் உள்ளது. அதில் ஒன்றில் தோற்றால் கூட அரையிறுதிக்கான வாய்ப்பு முழுமையாக கை நழுவிப்போகும். அதனால், நியூசிலாந்துடன் நாளை நடைபெற உள்ள போட்டி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியான போட்டியாக இருக்கும்.
ஆப்கானிஸ்தான்
இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வெற்றிகளை பெற்ற அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் தான். பாகிஸ்தான், இலங்கை அணிகளை எளிதாக வென்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு மேலும் 3 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டில் வென்றால் கூட அரையிறுதிக்கான வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இன்றைய போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தினால் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் முன்னேறும் வாய்ப்பை பெறும்.
இலங்கை, நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை முற்றிலும் இழந்த நிலையில், இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அது ஆறுதல் வெற்றியாகவே இருக்கும். இந்த தொடரில் மிகப்பரிதாபகரமான அணியாக மாறியிருப்பது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து. 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இனி வரும் போட்டிகளில் ஒருவேளை வெற்றி பெற்றால், அரையிறுதி ரேசில் உள்ள அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்க முடியும்.