இந்திய வீரர்களுக்கு நோ; பயிற்சியாளர்களுக்கு மட்டும் யெஸ்… பிசிசிஐ அதிரடி!

இந்திய பயிற்சியாளர் குழுவுடன் ராகுல் டிராவிட்
இந்திய பயிற்சியாளர் குழுவுடன் ராகுல் டிராவிட்

2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வி காணாமல் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அதிலும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வெற்றி இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக உள்ளது. கடந்த 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு அடுத்த போட்டி 29ம் தேதி தான் என்பதால், இந்திய அணிக்கு சிறிது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைவேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர் ஓய்வெடுப்பதற்காகவும், தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும் இந்திய அணியின் முகாமில் இருந்து தற்காலிகமாக வெளியேறி உள்ளனர். குறிப்பாக, மற்ற வீரர்கள் தரம்சாலாவிலேயே இரண்டு நாள்கள் ஓய்வெடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. விரைவில் இந்திய அணி லக்னோவில் பயிற்சிக்காக ஒன்றுகூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் மற்ற பயிற்சியாளர் குழு உறுப்பினர்கள் அனைவரும் தரம்சாலாவில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோவை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை முடியும் வரை இந்திய வீரர்கள் மலையேற்றம் உட்பட காயம் அடையக்கூடிய எந்த சாகசத்திலும் ஈடுபட இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

எனவே, மலையேற்றத்தில் பயிற்சியாளர்கள் குழுவினர் மட்டுமே பங்கேற்றனர், இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்த திரியுண்ட் மலைத்தொடர் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2875 மீட்டர் உயரத்தில் உள்ளது. பிசிசிஐ வெளியிட்ட இந்த வீடியோவில் பேசிய ராகுல் டிராவிட் இந்த மலை மேல் இருந்து பார்த்தால் சுற்றிலும் அருமையாக உள்ளது, இந்த இடம் உங்களை வியப்படைய வைக்கும் என்றார்.

பயிற்சியாளர்கள் குழுவுடன் இங்கு வருவது நம்பமுடியாத அனுபவம், இது ஒரு சிறந்த நாள், துரதிர்ஷ்டவசமாக, வீரர்களை இங்கு அழைத்து வர முடியவில்லை என்றார். மேலும், இந்த பாறைகளில் நடப்பது சற்று ஆபத்தானதும் கூட. ஆனால், போட்டிகள் இல்லாத நாளில் அவர்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்து இந்த இயற்கை சூழலை அனுபவிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in