3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3-ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்தார். அதனால் இந்திய அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடியை தொடர்ந்த இஷான் கிஷான் 126 பந்துகளில் இரட்டை சதமடித்து அசத்தினார். இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் சச்சின், சேவாக், ரோகித் சர்மாவுக்கு பிறகு இரட்டை சதமடித்து இஷான் கிஷான் சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து ஆடிய அவர் 24 பவுண்டரி , 10 சிக்ஸர்களுடன் 131 பந்துகளில் 210 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிலைத்து ஆடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் அதிரடி காட்டிய வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்தது.
410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி விளையாடியது. இதையடுத்து, தொடக்க வீரர்களாக அனாமுல் ஹக்- கேப்டன் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இந்த ஜோடி 33 ரன்னில் பிரிந்தது. அனாமுல் ஹக்8 ரன்னில் வெளியேறினார். பின்னர் கேப்டனுடன் ஷகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடியது. கேப்டன் தாஸ் 29 ரன்னிலும், ஹசன் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து வங்கதேச அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. முஷ்பிகுர் ரஹீம் 7 ரன்னிலும், யாசிர் அலி 25 ரன்னிலும், மஹ்முதுல்லாஹ் 20 ரன்னிலும், அஃபிஃப் ஹொசைன் 8 ரன்னிலும், மெஹிதி ஹசன் மிராஸ் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் 34 ஓவரில் வங்கதேசம் அணி 182 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி 227 ரன்னில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சிராஜ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்திய அணி இமாலய வெற்றி பெற்றாலும் தொடரை 2- 1 என்ற கணக்கில் வங்கதேசம் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.