இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழையுமா? - இங்கிலாந்து அணியின் பலம் என்ன?

இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழையுமா? - இங்கிலாந்து அணியின் பலம் என்ன?

இங்கிலாந்து அணியுடன் இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணி மோதுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஏற்கெனவே நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி, நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, புவனேஷ் குமார், அக்ஸர் படேல் ஆகியோரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது இந்திய அணி.

இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்களின் விக்கெட்டை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பவர்பிளேயில் எடுத்தால் ஆட்டம் இந்தியாவின் கையில் இருக்கும்.

அதுபோல ஆல் ரவுண்டர் சாம் கரண் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தி வருகிறார். இவர் நிச்சயம் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார். அதுபோல மொயின் அலி மற்றும் அடில் ரஷித் போன்ற பந்துவீச்சாளர்களும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். இதையெல்லாம் சமாளிக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாகும். இங்கிலாந்து பேட்ஸ்பேன் டேவிட் மாலன் மற்றும் பவுலர் மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் களமிறங்குவது சந்தேகத்தில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டி20 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியதில், இந்தியா 12 போட்டிகளிலும், இங்கிலாந்து 10 போட்டிகளிலும் வென்றுள்ளது. உலகக்கோப்பை டி20 போட்டிகளில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 2 முறையும், இங்கிலாந்து 1 முறையும் வென்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in