
நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற இந்தியா 411 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன் எடுத்தது.
இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் அய்யர் 128 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேஎல் ராகுல் 102 ரன்னும், ரோகித் ஷர்மா 61 ரன்னும், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் தலா 51 ரன்னும் எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் பாஸ் டிலீ அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார். 411 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கும் நெதர்லாந்து அணி இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்குமா அல்லது வீழுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியடையாத ஒரே அணியாக அரையிறுதிக்குள் நுழையும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.