
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக மும்பை மற்றும் அகமதாபாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரிலேயே மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இதனைக் காண இந்தியா முழுவதும் இருந்தும் ரசிகர்கள் அகமதாபாத்திற்கு படையெடுக்க உள்ளனர்.
இந்நிலையில், மேற்கு ரயில்வே நிர்வாகம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களுக்காக மும்பை மற்றும் அகமதாபாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பை சென்ட்ரல்-அகமதாபாத் சிறப்பு ரயில் நாளை மில்லினியம் சிட்டியில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். அதேபோல், அகமதாபாத் -மும்பை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் அக்டோபர் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, மும்பை சென்ட்ர ரயில் நிலையத்தை பிற்பகல் 12.10 மணிக்கு வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கு "சிறப்புக் கட்டணம்" வசூலிக்கப்படும் என்றும், இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ரயில்கள் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் ஜெனரல் செகன்ட் கிளாஸ் பெட்டிகளை உள்ளடக்கியது. அவை தாதர், போரிவலி, பால்கர், வாபி, வல்சாத், நவ்சாரி, சூரத் மற்றும் வதோதரா நிலையங்களில் இரு திசைகளிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.