இலங்கை அணியிடமும் தோற்றது இந்தியா: இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கேள்விக்குறி!

இலங்கை அணியிடமும் தோற்றது இந்தியா: இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கேள்விக்குறி!

நேற்று நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணியிடமும் தோற்றது இந்தியா. இதனால் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்பு மிகமிக குறைந்துவிட்டது.

நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் இலங்கை கேப்டன் ஷனகா டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். முதலில் ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இறங்கிய விராட் கோலியும் டக் அவுட் ஆனார். அதன்பின்னர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இணை நிலைத்து ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 12வது ஓவரில் ரோகித் சர்மா 72 ரன்களில் ஆட்டமிழந்தார், அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 34 ரன்னில் அவுட்டானார். அதன்பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சொதப்பியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் மதுஷனகா 3 விக்கெட்டும், சமிகா கருணாரத்னே மற்றும் ஷனகா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டனர். இந்த இணை 97 ரன்கள் குவித்தபோது நிசாங்கா 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து மெண்டிஸும் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து கொஞ்சம் நம்பிக்கையுடன் இந்திய அணி போராட ஆரம்பித்தது. ஆனாலும் ராஜபக்ச மற்றும் ஷனகா இணை இந்தியாவின் கனவை கலைத்தது. 19 ஓவரின் 5 வது பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தவறவிட்டார். இதனால் அந்த அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் 174 ரன்கள் குவித்து த்ரில் வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 33 ரன்களையும் அடித்த இலங்கை கேப்டன் ஷனகா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் தவிர அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர். அதுபோலவே பந்துவீச்சும் மிக மோசமானதாக இருந்தது. வழக்கம்போல பீல்டிங்கிலும் இந்திய அணி மோசமாக செயல்பட்டது. இதனால் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானைத் தொடர்ந்து இலங்கை அணியிடமும் தோற்றுள்ளது இந்தியா. இந்த தோல்வி காரணமாக இந்திய அணியில் இறுப்போட்டி வாய்ப்பு கிட்டத்திட்ட இல்லாமல் போய்விட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in