ஜிம்பாப்வேயை ஊதித் தள்ளியது இந்தியா: வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார்!

ஜிம்பாப்வேயை ஊதித் தள்ளியது இந்தியா: வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார்!

மெல்பர்னில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியை எளிதாக வென்றது இந்திய அணி.

அரையிறுதிச் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்ட இந்திய அணி இன்று சம்பிரதாயமாக ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர். ஆனால் ரோகித் சர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலியும் 26 ரன்னில் அவுட்டானார். ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராகுல் 35 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். நன்றாக உயர்ந்த ரன்ரேட் சற்று சரிவினை சந்தித்தது. இந்த சூழலில் சூர்யகுமார் ஜிம்பாப்வே பந்துகளில் வாணவேடிக்கை காட்டினார். இதனால் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் 25 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 61 ரன்களை குவித்தார்.

187 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர் மாதவேர் மற்றும் சக்பவா ஆகியோர் டக்கவுட்டானார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. சிக்கந்தர் ராஸா மற்றும் ரியான் பர்ல் மட்டுமே நிலைத்து ஆடி அணியின் ஸ்கோர் 100 ஐத் தாண்ட உதவினர். இதனால் அந்த அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பர்ல் 22 பந்துகளில் 35 ரன்னும், ராஸா 24 பந்துகளில் 34 ரன்களும் குவித்தனர். இந்தியாவின் சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in