கடைசி பந்து வரை பயம் காட்டிய வங்கதேசம்: போராடி வென்றது இந்தியா!

கடைசி பந்து வரை பயம் காட்டிய வங்கதேசம்: போராடி வென்றது இந்தியா!

இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை இந்தியா போராடி வெற்றிபெற்றது.

டி 20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு இருந்தது.

அடிலெய்டு மைதானத்தின் தொடங்கிய இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனாலும் மறுமுனையில் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியும் நிதானமாக ஆடினார்கள். ராகுல் 32 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் கோலி நிலைத்து ஆடி அரைசதத்தை கடந்தார். இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. கோலி 44 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணியின் ஹசன் முகமது 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

185 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி அனைவரின் எதிர்பார்ப்பையும் தாண்டி இந்திய அணியை பதற வைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் இந்திய பந்துவீச்சில் வாணவேடிக்கை காட்டினார். மறுபுறம் நஜ்முல் ஹுசைன் சாண்டோவும் நிலைத்து ஆடினார். இதன் காரணமாக இந்திய அணியின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்தது. இடையில் மழையும் குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவே இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. 27 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து அதிரடி காட்டிய லிட்டான் தாஸ் ரன் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.

இருப்பினும் கடைசியில் நூருல் ஹசன் மற்றும் தஸ்கின் அஹமது நிலையாக நின்று இந்தியாவுக்கு பயம் காட்டினார்கள். 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 15 வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் தஸ்கின் அஹமது ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார், ஒரு சிங்கிளும் கிடைத்தது. இதனால் அர்ஸ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. முதல் பந்தில் தஸ்கின் சிங்கிள் எடுத்தார். அடுத்த பாலில் நூருல் ஹசன் சிக்ஸர் விளாசி, இந்திய வீரர்களுக்கு கிலி ஏற்படுத்தினார். அடுத்ததாக டாட் பந்து வீசப்பட்டது. 4 வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் ஹசன். இதனால் 2 பந்துகளில் 11 ரன்கள் தேவை எனும் நிலை ஏற்பட்டது. 5 வது பந்தில் 4 ரன்களை விளாசினார் ஹசன். இப்போதுதான் இந்திய வீரர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டனர். கடைசி பந்தில் 1 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 64 ரன்கள் விளாசிய கோலி ஆட்டநாயகனாக தேர்வானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in