4 பந்துகளில் 4 விக்கெட் - மிரட்டிய சமியின் பந்துவீச்சு: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!

4 பந்துகளில் 4 விக்கெட் -  மிரட்டிய சமியின் பந்துவீச்சு: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை டி20 போட்டியில், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். ரோகித் சர்மா 19 ரன்னிலும், விராட் கோலி 19 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ராகுல் 33 பந்துகளில் 57 ரன்னும், சூர்யகுமார் 33 பந்துகளில் 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் ரிச்சர்டுசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

187 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ஸ் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிரடி காட்டி இந்தியாவை அலற வைத்தனர். மார்ஸ் 35 ரன்னிலும், பிஞ்ச் 76 ரன்களிலும் ஆட்டமிழந்த பின்னர், ஆட்டம் இந்தியாவின் கையில் வந்தது. அதன்பின்னர் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் முகமது சமி பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளில் இரண்டு, இரண்டு என நான்கு ரன்களை கம்மின்ஸ் எடுத்த நிலையில், மூன்றாவது பந்தில் அவரை சமி அவுட்டாக்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்த பந்தில் அஸ்டன் அகர் ரன் அவுட்டானார், அடுத்த பந்தில் ஜோஷ் இங்லிஸ் அவுட்டானார், கடைசி பந்தில் ரிச்சர்டுசனும் காலியானார். கடைசி 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை வெற்றிபெற வைத்தார் முகமது சமி. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 20 ஓவர்களில் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in