கைக்கோர்த்த கோலி - சூரியகுமார்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா!

கைக்கோர்த்த கோலி - சூரியகுமார்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று இரவு நடந்த கடைசி டி20 போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் இந்தியாவில் நடந்தது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்ததால், நேற்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீன், கேப்டன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். கிரீன் தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். மறுபுறம் பிஞ்ச் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 21 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 51 ரன்கள் விளாசி கிரீன் அவுட்டானார். ஆனால் அதன்பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டமிழந்தனர். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டிம் டேவிட் இந்திய பந்துவீச்சை வானவேடிக்கை நிகழ்த்தினார். இவர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய அணி.

அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ரோகித் சர்மாவும் 17 ரன்னுடன் வெளியேறினார். அதன்பின்னர்தான் கோலி - சூர்யகுமார் இணை கைக்கோர்த்தது. கோலி ஒருபக்கம் ஓரளவு அடித்து ஆட, சூர்யகுமார் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்ஸர் மழையாகப் பொழிந்த சூர்யகுமார் 36 பந்துகளில் 69 ரன்கள் ( 5 சிக்ஸர், 5 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விராட் கோலி மிகவும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு உறுதுணையாக ஹர்திக் பாண்ட்யாவும் விளையாடினார். கோலி 63 ரன்களுடன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் 2 பந்துக்கு நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில் 20 வது ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து இந்தியாவை வெல்ல வைத்தார் பாண்ட்யா. அவர் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆட்டநாயகனாக 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்த சூர்யகுமார் தெர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய அக்‌ஷர் படேல் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in