ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை: அதிரடி காட்டுமா இந்தியா!

ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை: அதிரடி காட்டுமா இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இன்று மொகாலியில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது ஆஸ்திரேலியா. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாத விரக்தியில் உள்ள இந்திய அணி, இப்போட்டியில் அதிரடி காட்டும் என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் இத்தொடரில், 3 போட்டிகளில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இன்று முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் விராட் கோலி நல்ல பார்மில் உள்ளார். மற்றபடி ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோரின் ஆட்டம் சுமாராகவே உள்ளது. மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையும் தொடர்ந்து சொதப்பி வருகின்றது. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நம்பிக்கை அளிக்கிறார். பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் அணிக்கு திரும்பியுள்ளது நல்ல அம்சமாக பார்க்கப்படுகிறது.

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஒட்டுமொத்தமாக நல்ல பார்மில் உள்ளது. பேட்ஸ்மேன்கள் ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், டிம் டேவிட் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சிலும் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இரு அணிகளுமே சமபலத்துடன் உள்ளதால், இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 13 போட்டிகளில் இந்தியாவும், 9ல் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in