ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியினர் விவரங்களை உறுதி செய்வதற்கான கெடு வியாழனோடு முடிவடையும் சூழலில், கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அணி விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வுக் குழு, அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான இறுதி 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.
மட்டை வீச்சாளர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது உடற்தகுதியை நிரூபித்துள்ள நிலையில், ஆல்-ரவுண்டர் அக்சர் படேலின் உடற்தகுதி மட்டுமே கடைசி வரை இழுபறியில் இருந்தது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவரது காயம் காரணமாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023-க்கான இறுதிப் போட்டியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டார்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அக்சர் படேல் உடல் தகுதி பெறத் தவறினால், அவருக்குப் பதிலாக யாரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதும் பெரும் கேள்வியாக நீடித்தது.
இந்த சூழலில் இந்தியாவின் உலகக் கோப்பை அணிக்கான இறுதி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. காயம் அடைந்த அக்சர் படேலுக்குப் பதிலாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் உட்பட இந்திய உலகக் கோப்பை அணியின் இறுதி 15 பட்டியல் இங்கே: ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ்.