
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -வங்கதேசம் அணிகள் மோதியது. டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் வங்கதேசத்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டான்சித் ஹசன் (0), நஜ்முல் ஹுசேன் சாண்டோ (4), அனுபவ வீரர் முஷ்பிகூர் ரஹீம் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை தொடர்ந்து லிட்டன் தாஸ்- மகமதுல்லா ஜோடி, அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டது. லிட்டன் தாஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மகமதுல்லா அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்களும், மெஹதி ஹசன் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்கதேச அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது.
எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, அப்துல்லா ஷபீக் மற்றும் பஹார் ஜமான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அப்துல்லா ஷபீக் சிறப்பாக விளையாடி 68 ரன்களை குவித்தார். பஹார் ஜமான் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களுக்கு நடையை கட்டினார். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களையும், இஃப்திகார் அகமது 17 ரன்களையும் அடித்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!
சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!
அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!