உலகக்கோப்பை கிரிக்கெட்: இதுவரை இல்லாத சாதனையை படைத்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிராக 345 இலக்கை எட்டியதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் இலக்கை எட்டிப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் நேற்றிரவு மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து நிசாங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய நிசாங்கா 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மெண்டிஸ் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் 77 பந்தில் 122 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 1 ரன், டி சில்வா 25 ரன், தசுன் ஷனகா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சமரவிக்ரமா சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. குசல் மெண்டிஸ் 122 ரன்னும், சதீரா சமரவிக்ரமா 108 ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.

இதில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து முகமது ரிஸ்வானுடன் அப்துல்லா ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் கணிசமாக உயர்ந்தது. சதம் விளாசிய அப்துல்லா ஷபிக், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 131 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

345 இலக்கை எட்டியதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் இலக்கை எட்டிப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து 328 ரன்களை எட்டிப்பிடித்தது. 2019-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக வங்காளதேசம் 322 ரன்களை எட்டிப்பிடித்துள்ளது. 2015-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக வங்காளதேசம் 319 ரன்களையும், 1992-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இலங்கை 313 ரன்களையும் எட்டிப்பிடித்துள்ளது.

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் (131 நாட்அவுட்) படைத்துள்ளார். உலக கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும், இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்கள் என 4 பேர் சதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களை கண்ட போட்டி என்ற சாதனையில் இணைந்துள்ளது. இலங்கையில் குசால் மெண்டிஸ் (122), சமரவிக்ரமா (108) ஆகியோரும் பாகிஸ்தானில் அப்துல்லா ஷபிக் (113), முகமது ரிஸ்வான் (131) ஆகியோரும் சதம் அடித்தனர்.

இலங்கை அணிக்கெதிராக தோல்வியை சந்திக்காமல் அதிக வெற்றி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. 8 முறை உலக கோப்பையில் இலங்கையில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். இரு அணிகளிலும் 4-வது வீரர் சதம் அடிப்பது இது ஐந்தாவது முறையாகும். சமர விக்கரமா 108 ரன்களும், ரிஸ்வான் 131 ரன்களும் அடித்தனர். உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in