‘ஓய்வைப் பற்றி நானே தீர்மானிப்பேன். டாட்!’

ரொனால்டோ நெத்தியடி பதில்
‘ஓய்வைப் பற்றி நானே தீர்மானிப்பேன். டாட்!’

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் அதிகமான கோல்களை அடித்தவர் எனும் பெருமை கொண்டவர். தற்போது நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் வடக்கு மாசிடோனியா அணியை எதிர்கொள்கிறது அவரது தலைமையிலான போர்ச்சுகல் அணி.

37 வயதாகும் ரொனால்டோ ஓய்வுபெறுவது குறித்த கேள்விகள் அவ்வப்போது எழுவது உண்டு. இந்நிலையில், இஎஸ்பிஎன் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மிக உறுதியான, அதேசமயம் நிதானமான பதிலைத் தந்திருக்கிறார் ரொனால்டோ.

“இதே கேள்வியைத் தற்போது அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிறது. எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்போவது நான் மட்டும்தான், வேறு யாருமல்ல. இன்னும் விளையாட வேண்டும் என்று எனக்குத் தோன்றினால், தொடர்ந்து விளையாடுவேன். இனியும் விளையாட வேண்டுமா என எனக்குத் தோன்றினால், நான் விளையாட மாட்டேன். நான் முடிவெடுப்பேன். அவ்வளவுதான்” என்று அவர் கூறியிருக்கிறார்.

சொந்த நாட்டுக்காக விளையாடும்போதும், பிற கிளப்களுக்காகக் களம் காணும்போதும் தனது உச்சபட்சத் திறனைச் செலுத்தி விளையாடுபவர் ரொனால்டோ.

வடக்கு மாசிடோனியா அணியுடனான போட்டி குறித்து நேற்று ஊடகங்களிடம் பேசிய அவர், “இது வாழ்வா, சாவா எனும் போட்டி. எங்கள் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. எங்கள் வீரர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்” என்று கூறியிருந்தார்.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.