ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஹாங்காங்: இந்தியாவுடன் மோதுகிறது!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஹாங்காங்: இந்தியாவுடன் மோதுகிறது!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6வது அணியாக ஹாங்காங் தகுதி பெற்றுள்ளது. இந்த அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஆகஸ்ட் 27 ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. 27ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை மோதுகிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் ஆசிய கோப்பையில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றிருந்தன.

ஆசியகோப்பையில் இடம்பெறும் 6 வது அணிக்கான தகுதிப் போட்டி ஓமன் நாட்டில் கடந்த 5 நாட்களாக நடந்தது. இதில் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய அணிகள் கலந்துகொண்டன. இதில் நடந்த இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் மோதிய ஹாங்காங் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹாங்காங் அணியின் சார்பில் அதிகபட்சமாக யாசிம் முர்தாசா 58 ரன்களும், நிஜகாத் கான் 39 ரன்களையும், பாபர் ஹயாத் ஆட்டமிழக்காமல் 38 ரன்களையும் எடுத்தனர். ஹாங்காங் சார்பில் அதிரடியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய எசான் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தகுதிச் சுற்று தொடரில் ஆடிய மூன்று போட்டிகளிலுமே ஹாங்காங் வெற்றி பெற்றது.

தகுதி சுற்றில் வென்றதன் மூலம் ஆசிய கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள ‘ஏ’ பிரிவில் ஹாங்காங் அணியும் சேர்ந்துள்ளது. இதன்படி ஹாங்காங் அணி

ஆகஸ்ட் 31 ம் தேதி இந்தியாவையும், செப்டம்பர் 2-ம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.

ஐசிசி டி20 தரவரிசையில் 23வது இடத்தில் உள்ள ஹாங்காங் அணி, 2004, 2008 மற்றும் 2018க்குப் பிறகு இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகளில் முதன்முறையாக இந்த ஆண்டு ஹாங்காங் தகுதி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in