உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்துள்ளது. இதற்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடர் முழுவதுமே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் இறுதிப்போட்டி வரை இந்தியா அணி முன்னேறியுள்ளது. இந்நிலையில், நம்முடைய ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தம்முடைய எக்ஸ் தளத்தில் அவர் வீடியோ பதிவில் பேசியுள்ளளார். அதில், இந்திய அணியை குறித்து இதற்கு மேல் நான் பெருமையாக இருந்திருக்க முடியாது. இதுவரை நாங்கள் செய்தவை அனைத்திற்கும் பின்னால், பல வருட கடின உழைப்பு இருக்கிறது.
சிறு வயதிலிருந்தே நாம் கனவு கண்ட சிறந்த வாய்ப்பு ஒன்று, இன்னும் ஒரு படி தொலைவில் மட்டுமே உள்ளது. கோப்பையை நமக்காக மட்டுமல்லாமல் நாம் பின்னே இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக வெல்ல வேண்டும். கோப்பையை வீட்டுக்குக் கொண்டு வாருங்கள். ஜெய்ஹிந்த்" என்று கூறியுள்ளார்.