பட்டையைக் கிளப்பிய பாண்ட்யா: பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய இந்தியா!

பட்டையைக் கிளப்பிய பாண்ட்யா: பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய இந்தியா!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது இந்திய அணி.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இதனால் அப்போது முதலே எப்படியேனும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தவேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் கனவாக இருந்தது. இப்போது அதே துபாய் மண்ணில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி அசத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சினை தேர்வு செய்தார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே புவனேஷ்குமாரின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் தவித்த பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தானின் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் 10 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சும் பட்டையை கிளப்பியது. இதனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஒன்றன்பின் ஒருவராக ஆட்டமிழந்துக் கொண்டிருந்தனர். அந்த அணியின் சார்பில் முகமது ரிஸ்வான் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். 19.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார். ரோஹித் சர்மா, சூர்யகுமார் ஆகியோர் கணிசமான ரன்களை எடுத்தனர். மறுபுறம் பல விமர்சனங்களை சந்தித்து வரும் விராட் கோலி நிதானமாக ஆடி 35 ரன்கள் எடுத்தார். அதேபோல ரவீந்திர ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் எடுத்தார். இப்படியே பரபரப்பாக கடைசி ஓவர் வரை இந்திய அணியும் ஆட்டத்தை இழுத்து வந்துவிட்டது. கடைசியாக 3 பந்துகளில் 6 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா இருந்தது. அப்போது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு பாகிஸ்தானை வீழ்த்தினார் பாண்ட்யா. 17 பந்துகளில் 33 ரன்களை எடுத்ததுடன், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசியக்கோப்பையின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி தெம்புடன் இருக்கிறது இந்திய அணி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in