’கால்பந்து ஹராம்’ என்றவர் தற்போது கத்தாரில் என்ன செய்கிறார்?: மீண்டும் சர்ச்சையில் சாகிர் நாயக்

சாகிர் நாயக்
சாகிர் நாயக்

தொழில்முறை கால்பந்தாட்டத்தை ஹராம் என்று வரையறுத்த சாகிர் நாயக், ’தற்போதைய கத்தார் உலகக்கோப்பை போட்டிகளின் மத்தியில் என்ன செய்கிறார்’ என்ற விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

இந்தியாவில் பிறந்து தற்போது மலேசியாவில் வசித்துவரும் இஸ்லாமிய மதபோதகரான சாகிர் நாயக், தனது இனவாத பிரச்சாரங்கள் மற்றும் கருத்துக்களால் சர்வதேச அளவில் சர்ச்சைக்கு ஆளானவர். பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையான ஆதரவு, மாற்று மத நம்பிக்கையாளர்கள் உடனான உரசல், இஸ்லாமிய மதமாற்றத்துக்கு வலிய ஏற்பாடு, சட்ட விரோத தொடர்புகள் என சாகிரை சதா சுற்றும் சர்ச்சைகள் ஏராளம். இந்தியா மட்டுமன்றி அவர் தற்போது வாழும் மலேசியாவிலும் இந்துக்கள், சீனர்கள் என பலதரப்பினரிடத்தும் எதிர்ப்பை சம்பாத்தித்துள்ளார். அவற்றின் உச்சமாக ’சாகிரை நாடு கடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையும் அடங்கும்.

இந்த சாகிர் நாயக் தற்போது ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகள் களைகட்டியிருக்கும் கத்தாரில் முகாமிட்டிருக்கிறார். அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளின் அங்கமாக, இஸ்லாம் குறித்த சர்வதேச அமர்வில் உரையாற்ற அதிகாரபூர்வமாக அவர் அழைக்கப்பட்டிருக்கிறார். இதுவே சாகிரை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கும் வாய்ப்பளித்திருக்கிறது. முன்னதாக கால்பந்து குறித்து சாகிர் நாயக் பேசியதை தோண்டியெடுத்து கடைபரப்பும் அவர்கள், உப கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

சாகிர் அந்த வீடியோவில், ’தொழில்முறையாக கால்பந்து விளையாடுவதை ஹராம்’ என்கிறார். ’அப்படி விமர்சித்த சாகிர் நாயக் இப்போது கத்தாரில் என்ன செய்கிறார். கால்பந்தாட்டத்துக்கு எதிராக அங்கே அவர் வாய்திறப்பாரா? இதுதான் அவரது கொள்கை மற்றும் உறுதிப்பாடு’ என்று தாக்குகிறார்கள். இதே போன்று ஹராம் என்று சாகிர் ஒதுக்கியவற்றை பட்டியலிட்டு, மாறும் சூழலுக்கு ஏற்ப அவரது கொள்கைகள் பிசகியதையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இப்படி களமாடும் சாகிர் எதிர்ப்பாளர்களில் கணிசமான இந்திய இஸ்லாமியர்களும் அடங்குவார்கள்.

இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்பட்டு வரும் சாகிர் நாயக், மோடி மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை மலேசியாவில் இருந்தபடியும் தொடர்பவர். ஒரு கட்டத்தில் இந்தியாவுடனான நட்பில் பாதகம் நேருமோ என்று மலேசிய அரசு கவலைப்படும் அளவுக்கு சாகிர் நாயக்கின் அரசியல் செயல்பாடுகள் அமைந்திருந்தன. இதனால் மலேசிய அரசின் வாய்பூட்டு உத்தரவுக்கும் சில காலம் சாகிர் ஆளாகியிருந்தார். தற்போதும் மலேசியாவின் சில மகாணங்களில் அவர் தடைக்கும் ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கத்தாருக்கு சாகிர் அழைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காடி, உலகக்கோப்பை போட்டிகளை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற குரலும் பாஜகவினர் மத்தியில் இன்று எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in