கைதிகள் Vs காவலர்கள்: பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரு வித்தியாச ‘மோதல்!’

கைதிகள் Vs காவலர்கள்: பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரு வித்தியாச ‘மோதல்!’

நடிகர் ஆடம் சாண்ட்லர் நடித்த ‘தி லாங்கெஸ்ட் யார்டு’ (2005) திரைப்படத்தில் சிறைக் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையில் கால்பந்து (ரக்பி) மேட்ச் நடக்கும். கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு தருணம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறை வளாகத்தில் நேற்று நிகழ்ந்திருக்கிறது.

இரு தரப்பிலும் தலா மூன்று அணிகள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக மூன்று போட்டிகள் நடந்தன. அனைத்துப் போட்டிகளிலும் காவலர் அணிகளுக்கே வெற்றி கிடைத்தது என்பது வேறு விஷயம். எனினும், வெற்றி - தோல்விகள் இங்கு ஒரு விஷயம் அல்ல. சிறைக்கைதிகள் ஆக்கபூர்வமான, நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் போட்டிகளின் நோக்கம். தலைமைக் கண்காணிப்பாளர் பி.ரங்கநாத் முன்வைத்த யோசனையின்படி இந்தக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.

“பரப்பன அக்ராஹாரா சிறை வளாகத்தில் அனைத்துவிதமான விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடமளிக்கும் வகையில் பரந்துவிரிந்த மைதானம் இருக்கிறது. எனினும், அது பயன்படுத்தப்படவில்லை” என்று கூறியிருக்கும் ரங்கநாத், “சிறை வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தவும் சிறைக் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தவும் இந்தப் போட்டிகள் உதவும் என்பதால் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு வாரத்துக்கு முன்னர் இதற்கான முன்னெடுப்பு தொடங்கிய நிலையில், விசாரணைக் கைதிகளான சில இளைஞர்கள் ஓர் அணியை உருவாக்கி, காவலர்களுடன் நட்பு முறை கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்காகப் பயிற்சியில் இறங்கினர். அதைப் பார்த்ததும் ஆர்வம் கொண்ட தண்டனைக் கைதிகளும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முன்வந்தனர்.

இந்தப் போட்டிகளில் இடம்பெற முடியாத கைதிகள், பார்வையாளர்களாக அமர்ந்து பார்த்து ரசித்தனர். இந்தப் போட்டி தந்த உற்சாகத்தில் அடுத்தடுத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. அடுத்த வாரம் வாலிபால் போட்டிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான பயிற்சிகள் தொடங்கியிருப்பதாகவும் தலைமைக் கண்காணிப்பாளர் ரங்கநாத் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in