பாகிஸ்தான் முன்னாள் நடுவர் அஸத் ரவுஃப் காலமானார்: கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்

அஸத் ரவுஃப்
அஸத் ரவுஃப்

பாகிஸ்தான் முன்னாள் நடுவரும், ஐசிசி எலீட் பேனலின் உறுப்பினராக இருந்தவருமான அஸத் ரவுஃப் (66) மாரடைப்பால் காலமானார்.

பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அஸத் ரவுஃப் அடிப்படையில் ஒரு பேட்ஸ்மேன். 71 ஃபர்ஸ்ட் கிளாஸ் மேட்ச்களில் விளையாடி 3,423 ரன்களை எடுத்தவர். பின்னர் 2000-ம் ஆண்டும் முதல் நடுவராகப் பணியாற்றத் தொடங்கினார். முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய அவர், 2005 முதல் டெஸ்ட் போட்டிகளிலும் நடுவர் பணி செய்யத் தொடங்கினார்.

மொத்தம் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி-20 போட்டிகளில் நடுவராகவும், டிவி நடுவராகவும் பணிபுரிந்தார். பெண்கள் டி-20 போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பிரதான நடுவர் அமைப்பான எலீட் பேனலில் 2006 முதல் 2013 வரை அங்கம் வகித்தார்.

2013-ல் ஐபிஎல் மேட்ச் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கிய அவர், உடனடியாக எலீட் பேனலிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்தப் புகார் தொடர்பாக மும்பை போலீஸார் அவர் மீது சட்டவிரோத சூதாட்டம், மோசடி உள்ளிட்ட புகார்களைப் பதிவுசெய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் அதன் பின்னர் மும்பை திரும்பவில்லை. 2016-ல் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, 5 ஆண்டுகளுக்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

லாகூரில் வசித்துவந்த அஸத், அங்கு ஜவுளி மற்றும் காலணிகளை விற்கும் சிறிய கடையை நடத்திவருவதாகச் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார்.

இந்நிலையில், லாகூரில் மாரடைப்பால் நேற்று அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஸா உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in