கோலியை அழுத்தும் இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்: முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

கோலியை அழுத்தும் இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்: முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவற்றின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று(டிச.26) நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகம் என்பதால், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் கரோனா பாதுகாப்பு விதிமுறகளை பின்பற்றி போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே நாடு தென்னாப்பிரிக்கா என்ற வகையில், இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த மோதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. 7 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி ஏமாற்றத்துடனே இந்தியா திரும்பியுள்ளது. கடைசியாக 2018-ன் டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா பறிகொடுத்திருந்தது.

எனினும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி புதுவேகம் காட்டி வரும் இந்தியா, தென்னாப்பிரிக்காவிலும் அதனை பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு தெம்பூட்டும் வகையில் கேப்டன் டீன் எல்கர், ‘உள்ளூர் சூழலில் விளையாடுவது எங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இந்த போட்டிகள் மிகவும் முக்கியமானவையாக மாறி இருக்கின்றன. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது முதல், பிசிசிஐ தலைவர் கங்குலியுடனான கோலியின் மோதல் அதிகரித்து வருகிறது. பிசிசிஐ கங்குலி பக்கம் நிற்பதாக கோலி வருந்துகிறார். கோலி இந்தியா திரும்பியதும் கிரிக்கெட் வாரியம் அவரை விசாரிக்க நேரிடலாம்.

ஆனால் வெற்றிக் கோப்பையுடன் கோலி திரும்பினால் கங்குலியும், வாரிய நிர்வாகமும் வாயடைத்துப் போக வாய்ப்பாகும். அந்த வகையில் கோலிக்கு தென்னாப்பிரிக்க டெஸ்ட் பயணம் அழுத்தம் மிக்கதாக ஆகியிருக்கிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் கோலி சதமடித்து 2 ஆண்டுகளாகிறது. அதன் பொருட்டும் பயிற்சிகளில் கோலி தீவிரமாக இருக்கிறார்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வரிசையின், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் அதன் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட சேனல்களிலும் ரசிக்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in