
இந்தியா – ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் இரவே நரேந்திர மோடி மைதானத்தில் குவிந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
முதலில் சற்று சறுக்கலை சந்தித்த ஆஸ்திரேலியா பின்னர் சுதாரித்துக் கொண்டு போட்டி தங்கள் கையை விட்டு செல்லாமல் பார்த்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் கனவைக் கலைக்க ஆப்கானிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால் ஒற்றை ஆளாக, மேக்ஸ்வெல் போட்டியை வென்று கொடுத்தார்.
அதனால்தான், தற்போது இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா களம் காண்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்களால் நீலநிறமாக கடல் போல் இன்று காட்சியளிக்க போகிறது. அவர்களது ஆர்ப்பரிப்பும், ஆதரவும் இந்திய அணியினருக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் இரவே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குவிந்துவிட்டனர். மைதான நுழைவாயிலில் நின்று கொண்டு உற்சாகமாக, இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.