செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்த கூடுதலாக 10 கோடி: ஒதுக்கியது தமிழக அரசு!

செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்த கூடுதலாக 10 கோடி: ஒதுக்கியது தமிழக அரசு!

‘செஸ் ஒலிம்பியாட் 2022’ போட்டியைச் சிறப்பாக நடத்தும் வகையில் கூடுதலாக பத்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 23 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும் இந்திய அணியின் ஆலோசகராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடிக்க 92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் துவக்க மற்றும் நிறைவு விழாவிற்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத் தமிழக அரசிடம் இந்திய செஸ் கூட்டமைப்பு கோரிக்கை வைத்தது.

இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மேலும் ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்க இருப்பதாக அரசு வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in