இந்தியாவை ஊதித் தள்ளியது இங்கிலாந்து: ருத்ரதாண்டவம் ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் - ஜோஸ் பட்லர்!

இந்தியாவை ஊதித் தள்ளியது இங்கிலாந்து: ருத்ரதாண்டவம் ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் - ஜோஸ் பட்லர்!

இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து எளிதாக வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட் செய்ய தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் இரண்டாவது ஓவரில் 5 ரன்னிலும், ரோகித் சர்மா 27 ரன்னிலும், சூர்யகுமார் யாதவும் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த சூழலில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த விராட் கோலி அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். இந்திய அணியும் அர்ஷ்தீப் சிங், அக்ஸர் படேல், முகமது சமி, புவனேஷ் குமார், அஸ்வின், பாண்ட்யா என 6 பந்துவீச்சாளர்களையும் அனுப்பி பார்த்தது. ஆனால் யாருக்கும் அசராத ஹேல்ஸ் மற்றும் பட்லர் சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தனர். இதனால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 7 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 86 ரன்களை எடுத்தார். ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களை எடுத்தார்.

இன்றையப் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து அணி எதிர்கொள்ளவிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in