கனவுகள் மெய்ப்படும்: உலகக்கோப்பையுடன் உறங்கிய மெஸ்ஸி!

கனவுகள் மெய்ப்படும்: உலகக்கோப்பையுடன் உறங்கிய மெஸ்ஸி!

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களின் இறுதிப்போட்டியில் வென்ற, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி வெற்றிக்கோப்பையுடன் உறங்கிய படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக 2022 கால்பந்து உலகக்கோப்பை போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் லியோனல் மெஸ்ஸி. அதனால் இந்த உலகக்கோப்பைக்கான ஆட்டங்கள் கூடுதல் சுவாரசியம் பெற்றன. மாரடோனவால் தனது வாரிசு என்று அழைக்கப்பட்ட மெஸ்ஸி, மாரடோனா தனது வாழ்நாளில் மீண்டும் சாதிக்க இயலாததை மெஸ்ஸி சாதித்திருப்பதையும் கால்பந்து ரசிகர்கள் வெகுவாய் சிலாகித்து வருகின்றனர். அதிலும் மாரடோனா மறைந்த 2 வருடங்களில் சாதனைபுரிந்திருப்பது, அவருக்கான மெஸ்ஸின் அஞ்சலியாகவே பார்க்கப்படுகிறது.

36 ஆண்டுகளுக்குப் பின்னர் அர்ஜென்டினா ஈட்டியிருக்கும் கால்பந்து உலகக்கோப்பை அந்த நாட்டினரையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது. ஒரு நாள் தேசிய விடுமுறையை அறிவித்து நாடெங்கும் கொண்டாட்டங்களை களைகட்டச் செய்திருந்தனர். இதனூடே அடுத்த தலைமுறையினர் மத்தியில் கால்பந்து ஆட்டத்துக்கான கனவுகளையும் அர்ஜென்டினா தேசம் விதைத்திருக்கிறது.

தனிப்பட்ட வகையில் மெஸ்ஸியின் கனவும் மெய்ப்பட்டிருக்கிறது. இறுதிப்போட்டி நிறைவுற்ற தினத்தின் இரவு வெற்றிக்கோப்பையுடன் உறங்கிய மெஸ்ஸியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் நேற்றிரவு பதியப்பட்ட இந்த படத்துக்கு 12 மணி நேரத்தில் 44 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதயங்களை பறக்க விட்டிருக்கின்றனர். உலகமெங்கும் 150 பேர் கண்டு ரசித்த இறுதிப்போட்டியின் நிறைவாக, லூசைல் மைதானத்தில் உலகக்கோப்பையை கையில் ஏந்திய மெஸ்ஸியின் புகைப்படத்துக்கு 2 நாளில் 67 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதயங்களை பறக்கவிட்டிருக்கின்றனர்.

துறைகள் எதுவானபோதும் சாதிக்க விரும்புவோருக்கு கனவு நாயகனாகி இருக்கிறார் லியோனல் மெஸ்ஸி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in