இன்று தொடங்கவுள்ள ஆசிய போட்டிகளில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மூன்று வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாடுகளுக்கிடையே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தொடர், சீனாவில் கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடக்கிறது.
ஹாங்சோவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கும் போட்டி அக்.8-ம் தேதி நிறைவடைகிறது. தொடக்க விழாவில் பங்கேற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் போட்டியை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா என 45 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மொத்தம் 40 வகையான விளையாட்டுகளில், 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிகள் ஹாங்சோ நகரில் 56 இடங்களில் நடத்தப்படும். போட்டியில் சுமார் 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள், அலுவலர்கள், உதவியாளர்களும் சீனா சென்றுள்ளனர்.
இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 655 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பிரம்மாண்ட அணி பங்கேற்கவுள்ளது. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் முறையாக இல்லை என கூறி சீனா அனுமதி மறுத்துள்ளது.
ஆனால், சீனா உள்நோக்கத்துடன் வீராங்கனைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது என கூறி இன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.