ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனுக்கு மூன்றரை ஆண்டுகள் விளையாடத் தடை!

சூதாட்டம் தகவல் வெளியானதால் ஐசிசி நடவடிக்கை
ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் பிரன்டன் டெய்லர்
ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் பிரன்டன் டெய்லர்Hindu கோப்பு படம்

சூதாட்டத்தில் ஈடுபட அணுகியதை காலதாமதமாக தெரிவித்த ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் பிரன்டன் டெய்லருக்கு, மூன்றரை ஆண்டுகள் விளையாடத் தடை விதித்துள்ளது ஐசிசி.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பிரன்டன் டெய்லர். 35 வயதான பிரன்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்காக 34 டெஸ்ட், 205 ஒருநாள் மற்றும் 45 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி சமூக வலைதளத்தில் பரபரப்பான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார் டெய்லர்.

அதில், ஜிம்பாப்வேயில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வருமாறு தொழிலதிபர் ஒருவரின் அழைப்பை ஏற்று சென்றதாகவும், அப்போது நடந்த மதுவிருந்தின் போது தனக்கு அளித்த கோகைன் போதைப்பொருளை உட்கொண்டதாகவும், அடுத்த நாளில் அந்த வீடியோவைக் காட்டி, அந்த நபர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், “அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற பயத்தில் சூதாட்டத்தில் ஈடுபட முன்தொகையாக அளித்த ரூ.11 லட்சத்தை பெற்றுக்கொண்டு நாடு திரும்பினேன். தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி இந்த விஷயத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் உடனடியாக தெரிவிக்கவில்லை. 3 மாதம் கழித்து ஐசிசியிடம் புகார் தெரிவித்தேன். நான் ஒருபோதும் சூதாட்டத்தில் ஈடுபட்டதில்லை. இருப்பினும் சூதாட்டத்தில் ஈடுபடும்படி அணுகியதை உடனடியாக தெரிவிக்காதது தவறுதான். தனக்கு அளிக்கும் தண்டனையை ஏற்க தயார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரன்டன் டெய்லர் மீதான சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய ஐசிசி, அவர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க மூன்றரை ஆண்டுகள் தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. அத்துடன் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்காக அவர் ஒரு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரன்டன் டெய்லரின் தடை காலம் 2025-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in