கிரிக்கெட்டில் இப்படி ஒரு விதியா?: இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!

டைம் அவுட் விதியின் கீழ் ஆட்டமிழந்த இலங்கை வீரர் மேத்யூஸ்
டைம் அவுட் விதியின் கீழ் ஆட்டமிழந்த இலங்கை வீரர் மேத்யூஸ்

உலகக்கோப்பை போட்டியில் 'டைம் அவுட்' என்ற விதியை பயன்படுத்தி, இலங்கை வீரர் மேத்யூஸின் விக்கெட்டை வங்கதேச அணி எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 38 வது ஆட்டம், டெல்லியில் உள்ள அருண் ஜேய்ட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில், பெரேரா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதும், நிசங்க மற்றும் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த நிலையில், சமரவிக்ரமா மற்றும் அசலங்க ஆகியோர் நிலைத்து நின்று ரன்களை உயர்த்தினர்.

3 நிமிடங்களுக்குள் கிரீஸிற்கு வராததால் டைம் அவுட்
3 நிமிடங்களுக்குள் கிரீஸிற்கு வராததால் டைம் அவுட்

இந்நிலையில் 24.2 வது ஓவரில் சமரவிக்ரமா ஆட்டம் இழந்ததை தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் அடுத்த வீரராக களம் இறங்கினார். அப்போது அவரது ஹெல்மெட்டின் ஸ்ட்ராப் பகுதி சேதமடைந்ததால் மற்றொரு ஹெல்மெட்டை கொண்டு வருமாறு அவர் சக அணி வீரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள விதிகளில் ஒன்றான, ஒரு வீரர் ஆட்டம் இழந்த உடன் அடுத்த வீரர் கிரீஸிற்குள் வர மூன்று நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு டைம் அவுட் என்ற முறையில் அவுட் வழங்கப்படும் என்ற விதியை வங்கதேசத்தின் கேப்டனான ஷகீப் அல்ஹசன் பயன்படுத்தி நடுவரிடம் முறையிட்டார்.

டைம் அவுட்டின் அவுட்டாகும் முதல் வீரர் மேத்யூஸ்
டைம் அவுட்டின் அவுட்டாகும் முதல் வீரர் மேத்யூஸ்

இதனால் இரு அணி வீரர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து நடுவர்களிடம் மேத்யூஸ் முறையிட முயன்ற போதும், தங்களது அப்பீலை திரும்ப பெற்றுக் கொள்ள முடியாது என வங்கதேச அணி வீரர்கள் உறுதியாக இருந்தனர்.

இதனால் நடுவர்கள், மேத்யூசுக்கு அவுட் வழங்கினர். இதனால் ஒரு பந்து கூட சந்திக்காமல், இந்த விதி மூலம் அவுட் ஆகும் முதல் சர்வதேச வீரர் மேத்யூஸ் என்ற மோசமான புள்ளிவிவரம் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இலங்கை வீரர்கள், அசலங்க மற்றும் டிசில்வா ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in