உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை!

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் போட்டிக்கு இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி 9 போட்டிகளில் விளையாடி 7 ல் வெற்றியும், 2 தோல்வியையும் பெற்றுள்ளது. ஆனால், அந்த அணி தென்னாப்பிரிக்காவிடம் லீக் போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதற்கு முன்னர் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் அந்த அணியின் அனுபவமும், வெற்றியும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்க அணி லீக் சுற்றில் 7ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் இன்றைய போட்டியில், அந்த அணிக்கு, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் நம்பிக்கை இருக்கும்.

ஆனால், கடந்த காலங்களை பொறுத்தவரை, அந்த அணி நாக்-அவுட் சுற்று போட்டிகளில் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. அதே நேரம் இந்த உலகக் கோப்பை தொடரில் ரன் சேஸிலும் அந்த அணி திணறி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் தோற்றால் அதுவே அந்த அணிக்கு பாதகமாக முடியலாம்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் அணியே அதிக வெற்றிகளைக் குவித்துள்ளது. அந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி 13 ஆட்டங்களில் 10ல் முதலில் பேட்டிங் செய்த அணியும், 3ல் இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன.

அதனால், இன்றைய போட்டியில் டாஸ் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதேநேரம், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கொல்கத்தாவில் இன்று மழைக்கான வாய்ப்பு உள்ளதால், அதன் தாக்கமும் இன்றைய ஆட்டத்தின் போக்கை மாற்றலாம்.

அதனால், அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி, அதிரடி காட்டும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுவதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in