இன்று தொடங்குகிறது ஆசியக் கோப்பை கிரிக்கெட் திருவிழா: யாருக்கு சாம்பியன் வாய்ப்பு?

இன்று தொடங்குகிறது ஆசியக் கோப்பை கிரிக்கெட் திருவிழா: யாருக்கு சாம்பியன் வாய்ப்பு?

கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு எம்ரேட்ஸில் இன்று தொடங்குகிறது.

இருபது ஓவர் கிரிக்கெட் வடிவில் நடத்தப்படும் 2022 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏ மற்றும் பி பிரிவில் உள்ள 6 அணிகளும் முதலில் தங்களுக்குள் மோதி வெற்றிபெறும் 4 அணிகள் ‘ சூப்பர் 4’ போட்டிக்கு தேர்வாகும். அந்த நான்கு அணிகளில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருவது இந்திய அணிதான். 1984ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஆசியக்கோப்பை போட்டிகளில் இதுவரை 7 முறை இந்திய அணி சாம்பியனாகியுள்ளது. இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசியக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.

துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறவுள்ள போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு ஆசியக்கோப்பை போட்டி இலங்கையில்தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அந்த நாடு, தன்னால் இந்த போட்டியை நடத்த முடியாது என கைவிரித்தது. இதனால் இந்த போட்டி இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இந்த ஆசியக் கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறும்.

சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ள இந்தியா- பாகிஸ்தான் என இரண்டில் ஒரு அணிதான் சாம்பியன் பட்டம் வெல்லும் எனவும் கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in