இந்திய ராணுவத்துக்குள் வளரி!

கோவில்பட்டி இளைஞரின் சத்தமில்லாத சாதனை
தனது அணியினருடன் கார்த்திக் ராஜா
தனது அணியினருடன் கார்த்திக் ராஜா

வளரியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களுக்கே சொந்தமான கலை என்று கூறி வருகின்றனர். ஆனால், அது பண்டைத் தமிழரின் கலைகளில் ஒன்று என தக்க சான்றுடன் நிரூபித்து வருகிறார் கோவில்பட்டியைச் சேர்த்த 35 வயதான கார்த்திக் ராஜா.

இந்திய கப்பற்படையில் பணியாற்றும் இவர், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக வளரி குறித்த பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே கார்த்திக் ராஜாவின் அம்மா இவரது கையில் வளரியை எடுத்துக் கொடுத்தார். அதிலிருந்தே கார்த்திக் ராஜாவுக்கு வளரி குறித்த ஆர்வமும், தேடலும் அதிகரிக்கத் தொடங்கியது.

2007-ம் ஆண்டு கப்பற் படையில் பணிக்கு சேர்ந்தார் கார்த்திக் ராஜா. ஆனாலும் வளரி குறித்த தனது ஆய்வுகளை நிறுத்தவில்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் வளரி குறித்த பண்டைய தரவுகளைச் சேகரித்துக் கொண்டே இருந்தார். இந்த ஆய்வுகளை மேற்கொண்டமைக்காக இரண்டு முறை கௌரவ டாக்டர் பட்டமும் இவருக்குக் கிடைத்தன.

வளரி வீசும் கார்த்திக் ராஜா
வளரி வீசும் கார்த்திக் ராஜா

இன்னமும் கப்பற்படையில் தனது பணியைத் தொடரும் கார்த்திக் ராஜா, வளரி மீது தனக்குள்ள ஆர்வம் குறித்து நம்மிடம் பேசினார். “மேலோட்டமா தெரிஞ்சவங்க வளரி பற்றி என்னென்னமோ சொல்றாங்க. ஆனா, தமிழர்களின் சுத்தமான போர் ஆயுதம் வளரி என்பதை ரொம்ப ஆழமா ஆராய்ச்சி செஞ்சு நான் தெரிஞ்சுக்கிட்டேன். நம்ம கத்துக்கிட்ட வளரி வீச்சை மாணவர்களுக்கும் ஒரு விளையாட்டா சொல்லிக் கொடுக்கணும்னு, ‘மருது வளரி பூமராங்’ அமைப்பைத் தொடங்கினோம்.

இந்த அமைப்பின் மூலமா ஒருபக்கம் வளரி குறித்த ஆய்வுகளைச் செஞ்சுக்கிட்டே இன்னொரு பக்கம், ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்தக் கலையைச் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கோம். இன்றைய தேதிக்கு 18 மாவட்டங்களில் 50 பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு இந்தக் கலையைச் சொல்லிக் குடுத்துட்டு இருக்கோம்.

சென்னை, குரோம்பேட்டையில், ‘மாமன்னர் பூலித்தேவன் நினைவு சிலம்பக்கூடம்’ என்ற பெயரில் தமிழரின் போர் கலைகளை கற்றுக்கொடுக்கும் பயிற்சிப்பள்ளி ஒன்றையும் நடத்திட்டு வரோம். இதில் சிலம்பம், சுருள்வாள், மான்கொம்பு சண்டைப் பயிற்சி, வேல்கம்பு, வாள் சண்டை உள்ளிட்டவற்றைக் கத்துக்குடுத்துட்டு இருக்கோம்.

மாணவர்களுடன்...
மாணவர்களுடன்...

முதல் முறையா வளரி வீசுறப்ப அதை நம்மால் மீண்டும் அவ்வளவு ஈஸியா பிடிக்க முடியாது. ஆனால், வளரி வீச்சின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டால் தன்னம்பிக்கை பிறக்கும்; வளரியும் நம் கைக்குள் வரும்” என்று சொல்லும் கார்த்திக் ராஜா, தனது ஆய்வின் மூலம் அறிந்து கொண்ட நுணுக்கங்களைக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக் கூடிய நேர்த்தியான வளரிகளை தயாரித்து விற்பனையும் செய்து வருகிறார்.

இவரிடம் வளரி பயின்ற மதுரையைச் சேர்ந்த முத்து, கிஷோர், ராஜேந்திரன் ஆகியோர் இந்தியாவின் முதல் பெண்கள் வளரி அணியையும் உருவாக்கியுள்ளனர். இவர்களது முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வளரியை ஒரு விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. இந்த அணியினர் அளிக்கும் வளரி பயிற்சிகளை அங்கீகரித்து அதற்கான சான்றிதழையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகமே வழங்கி வருகிறது. இதன் மூலம், சிலம்பத்தைப் போலவே வளரியும் எதிர்காலத்தில் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் பாடமாக வர வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் கார்த்திக் ராஜா.

அடுத்த கட்டமாக இந்திய ராணுவத்துக்குள்ளும் வளரியைக் கொண்டு சென்றுள்ளார் கார்த்திக் ராஜா. வளரியில் விருப்பமுள்ள முப்படையினருக்கும் அவர்களது குழந்தை களுக்கும் வாரம் இரண்டு முறை வளரிப் பயிற்சி அளித்து வருகிறார் கார்த்திக் ராஜா. இவரிடம் பயிற்சி எடுத்த ராணுவ வீரர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கும் அந்தப் பயிற்சியை அளித்து வருகிறார்கள்.

வளரி குறித்து கள ஆய்வின் போது...
வளரி குறித்து கள ஆய்வின் போது...

நிறைவாக நம்மிடம் பேசிய கார்த்திக் ராஜா, “இந்தியாவில் 12 மாநிலங்களில் வளரி அணிகள் இருக்கின்றன. இந்த அணிகளைக் கொண்டு இரண்டு முறை தேசிய அளவிலான வளரி போட்டிகளை நாங்கள் நடத்தி இருக்கிறோம். இதேபோல் சர்வதேச அளவில் வளரி விளையாட்டைக் கொண்டு செல்ல வேண்டும். அதன் தொடக்கமாக, வரும் நவம்பர் மாதம் இண்டோ - ஆஸ்திரேலியா வளரிப் போட்டி இந்திய - ஆஸ்திரேலிய அணியினருக்கு இடையே இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதுதான் இந்தியாவில் முதன் முதலில் நடைபெறும் சர்வதேச அளவிலான வளரிப் போட்டி” என்று பெருமைமிளிரச் சொன்னார்.

பண்டைத் தமிழர்களின் பாரம்பரியக் கலையாக அறியப்படும் வளரி இங்கிருந்து தான் வெளிநாடுகளுக்குப் பரவி இருக்கிறது. அப்படி கடத்தப்பட்ட நாடுகளில் எல்லாம் இந்தக் கலை பிரபல்யமாக இருக்கிறது. ஆனால், கலையின் பிறப்பிடமான இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் இன்னும் அதன் அருமை பெருமைகள் உணரப்படவில்லை.

வளரி என்பதை இந்தியாவில் ஒரு கலையாக உணராமல் அதை ஒரு ஆயுதம் என்ற அளவில் சுருக்கிவிட்டனர். அதை மாற்றி, வளரியை ஒரு விளையாட்டாக மாற்ற ரொம்பவே மெனக்கிட்டு வருகிறது கார்த்திக் ராஜா டீம். அவர்களின் இந்த முயற்சி ஜெயிக்கட்டும்; வளரியும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப் படட்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in