கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம்: அர்ஜென்டினாவில் இன்று தேசிய விடுமுறை!

கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம்: அர்ஜென்டினாவில் இன்று தேசிய விடுமுறை!

உலகக்கோப்பை கால்பந்து வெற்றியை சிறப்பாக கொண்டாடுவதற்காக அர்ஜென்டினாவில் இன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா அணியின் உலகக் கோப்பை வெற்றியை இன்று அந்நாட்டின் புவெனஸ் அயர்ஸில் உள்ள ஒபெலிஸ்க் வளாகத்தில் கொண்டாடுவதாக அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது. இது வரலாற்று ரீதியாக விளையாட்டு கொண்டாட்டங்களின் மையமாக உள்ளது.

கால்பந்து வெற்றியைக் கொண்டாட அர்ஜென்டினா அரசாங்கம், இன்று(டிசம்பர் 20) வங்கி மற்றும் பொது விடுமுறை என்று அறிவித்தது. இதனால் முழு நாடும் "அர்ஜென்டினா அணிக்காக தங்களின் ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும்" என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆம், நாங்கள் உலக சாம்பியன்கள்" என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.

இறுதிப் போட்டியில் பிரான்சை தோற்கடித்த லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அணி, இன்று அதிகாலை அர்ஜென்டினாவுக்கு விமானம் மூலம் வந்திறங்கியது. உலக சாம்பியன் பட்டத்தை வென்றதை ரசிகர்களுடன் கொண்டாட உலக சாம்பியன் அணி இன்று நண்பகல் ஒபெலிஸ்கிற்கு புறப்படும்.

உலகக் கோப்பையின் மிகச்சிறந்த இறுதிப் போட்டி என்று பலராலும் பாராட்டப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்த அர்ஜென்டினா, பெனால்டி ஷூட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது. மூன்றாவது உலகக் கோப்பையை வென்ற பிறகு, கொண்டாட்டங்களைத் தொடர அர்ஜென்டினா அணியின் வருகையை ஆவலுடன் அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

"அர்ஜென்டினாவில் இது எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கிறது என்பதைப் பார்க்க நான் விரும்புகிறேன். அவர்கள் எனக்காக காத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்கு சென்று அவர்களுடன் அதை அனுபவிக்க என்னால் காத்திருக்க முடியாது" என்று கேப்டன் லியோனல் மெஸ்ஸி கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in