ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் மரணம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் மரணம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகப் புகழ்பெற்ற ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46), நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். காவல் துறையின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி இந்தத் தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள டவுன்ஸ்வில்லி நகர் அருகே நேற்று இரவு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் கவிழ்ந்ததாகவும், அந்த விபத்தில் அவர் உயிரிழந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. டவுன்ஸ்வில்லி நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்ச் எனும் இடத்தில் இந்த விபத்து நேர்ந்ததாக குயின்ஸ்லாந்து போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

1998 நவம்பர் 10-ல் லாகூரில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். சிறந்த பேட்ஸ்மேனாகப் புகழ்பெற்ற அவர், 90-க்கும் அதிகமாக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேன் ஆவார்.

198 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆஸ்திரேலிய அணி இரண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தவர். 26 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றிவந்தார்.

ஆஸ்திரேலிய அணியில் விக்கெட் கீப்பராக இருந்த ராட் மார்ஷ், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வார்ன் ஆகிய இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் மார்ச் மாதம் மறைந்தனர். அவர்களின் மரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in