
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் 42வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துக் களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் 400க்கும் அதிகமான ரன்களை குவித்து, தென்னாப்பிரிக்க அணியை மிக குறைந்த ரன்னில் வீழ்த்தினால் மட்டுமே அந்த அணி அரையிறுதிக்கு செல்லும். அதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதால், இன்றைய போட்டியில் பெறும் வெற்றியுடன், தொடரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் நினைக்கிறது.
தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு உறுதியான நிலையில், இந்த போட்டியின் வெற்றி, தோல்வி அந்த அணியை பாதிக்காது. இருந்தாலும், அரையிறுதிக்கு முன்னதான போட்டியில் தோல்வியை தழுவது அந்த அணிக்கான பின்னடைவாக அமையலாம். அதனால், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையிலேயே தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது.
பாகிஸ்தான், இலங்கை அணிகளை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் தனது முழு பலத்துடன் எதிர்கொண்டது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா அணி திணறியே வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன. நாளைய பாகிஸ்தான் - இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே அரையிறுதியில் விளையாடும் நாலாவது அணி என்பது உறுதியாகும்.