
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 180 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது நெதர்லாந்து.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அந்த அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணி சார்பில் சைபிராண்ட் ஏங்கல்பிரிச் 58 ரன்னும், மேக்ஸ் ஓடோவ் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 3 விக்கெட்டும், நூர் அஹமத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
180 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. சேஸிங்கில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அரையிறுதிக்கான போட்டியில் அந்த அணியும் இணையும். அதன் காரணமாக உலகக் கோப்பை தொடர் மேலும் விறுவிறுப்படையும்.