1000வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!- சாதனை படைக்கும் முதல் அணி இந்தியா

ரோகித் சர்மா
ரோகித் சர்மாhindu கோப்பு படம்

மேற்கிந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நாளை நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்குவதன் மூலம் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை படைக்க உள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி புதிய வரலாற்றை படைக்கிறது. 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை புரிய உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய அணி முதல் முறையாக 1974-ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. இதில் 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது. ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை உலகளவில் 28 அணிகளால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. ஐ.சி.சி.யின் அங்கீகாரம் படி டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 அணிகளுக்குத்தான் நிரந்தர ஒருநாள் போட்டி அணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருநாள் ஆட்டத்தில் 1000-வது போட்டியில் விளையாட உள்ள முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதற்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியா அந்த நிலையை அடையும். 1000வது ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார். முதல் போட்டிக்கு அஜீத் வடேகரும், 100வது போட்டிக்கு கபில்தேவும், 200வது மற்றும் 400-வது போட்டிக்கு அசாருதீனும், 300வது போட்டிக்கு சச்சின் டெண்டுல்கரும், 500-வது போட்டிக்கு கங்குலியும், 600-வது போட்டிக்கு சேவாக்கும், 700, 800, மற்றும் 900-வது போட்டிகளுக்கு தோனியும் கேப்டனாக இருந்துள்ளனர்.

மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங் குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு விளையாட உள்ள முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். நாளைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in