சச்சினுடன் சக பயணிகளாய் கிரிக்கெட் ஜாம்பவான்கள்: வைரலான செல்ஃபி!

சச்சினுடன் சக பயணிகளாய் கிரிக்கெட் ஜாம்பவான்கள்: வைரலான செல்ஃபி!

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறது. எந்தத் தருணத்தில் அந்தப் படம் எடுக்கப்பட்டது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) இணைந்து சாலைப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் போட்டித் தொடரை ரவி கெய்க்வாட் எனும் மகாரஷ்டிர அரசு அதிகாரி நடத்திவருகிறார். தானே நகரின் வட்டாரப் போக்குவரத்து தலைமை அதிகாரி எனும் முறையில் அவரது முன்னெடுப்பில் 2020-ல் முதன்முறையாக சாலைப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் டி-20 போட்டி நடந்தது. அதில், உலகின் பிரதான கிரிக்கெட் அணிகளின் முன்னாள் வீரர்கள் தத்தமது நாட்டுக்காக விளையாடினர். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றி கோப்பையைக் கைப்பற்றியது.

இதன் இரண்டாவது உலகக் கோப்பைப் போட்டி, செப்டம்பர் 10-ல் உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் தொடங்கியது. அதில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா லெஜெண்ட்ஸ் அணியை வென்றது.

இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து போன்ற அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. கான்பூர், இந்தூர், டெஹ்ராடூன், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. இதன் அரை இறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் ராய்ப்பூரில் நடக்கவிருக்கின்றன.

இந்திய் அணியில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனாஃப் படேல், ஸ்டூவர்ட் பின்னி, எஸ்.பத்ரிநாத், நமன் ஓஜா, மன்ப்ரீத் கோனி, பிரக்யான் ஓஜா. வினய் குமார், அபிமன்யூ ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்க விமானத்தில் செல்லும் கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படங்களை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். அதில் இந்திய அணியினருடன் பிற நாட்டு வீரர்களும் காணப்படுகிறார்கள்.

‘இந்தப் படங்களில் எத்தனை சர்வதேச ரன்களும் (பேட்ஸ்மேன்கள்) விக்கெடுகளும் (பவுலர்கள்) இருக்கிறார்கள் எனச் சொல்ல முடியுமா?’ என நகைச்சுவை தொனிக்க கேள்வியும் எழுப்பியிருக்கிறார். இந்தப் படங்களும் அவரது பதிவும் செம வைரல் எனச் சொல்லத் தேவையில்லை அல்லவா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in